கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
கல்கிசை – ஹுலுதாகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உந்துருளியில் பிரவேசித்த இருவரால் கடந்த 15 ஆம் திகதி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்தில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (18) மாலை வத்தளை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவே கொம்பனித்தெரு பகுதியில் வைத்து, இந்தக் குற்றச் செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரு ஆண்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, 12 தோட்டாக்கள் மற்றும் 6 வெற்றுத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்கள் 28, 32 மற்றும் 35 வயதுடைய கொழும்பு 12, கொழும்பு 14 மற்றும் தளுபொத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபரான பெண் குருண பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.