நேரலை

கத்தோலிக்க சபையுடன் அரசாங்கம் உயர்மட்டக் கலந்துரையாடல்: பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் குறித்து கவனம்

வெளியீடு: August 13, 2026 | எழுதியவர்: Vizhiththirai

கொழும்பு — அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கத்தோலிக்க சபையுடனான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முறைமைகள் குறித்தும் பேசப்பட்டது. *

கத்தோலிக்க மதத்தைப் போதிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய பொறிமுறையைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கக் கன்னியாஸ்திரிகள், அருட்தந்தைமார்களை உள்வாங்குவது தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது சொந்த மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என பேராயர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்திற்கு பேராயர் நன்றிவருடத்திற்கு மூன்று முறை கத்தோலிக்க சபையுடன் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் விபத்தினால் நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசாங்கம் மேலும் தீவிரமாக ஆராய வேண்டும் என்றும் பேராயர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில் கத்தோலிக்க சபையின் சார்பில் அருட்தந்தை ஹெரால்ட் ஆண்டனி பெரேரா, அருட்தந்தை விமல் சிறி ஜயசூரிய, அருட்தந்தை மெக்ஸ்வெல் சில்வா உள்ளிட்ட சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அரசாங்க சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் கத்தோலிக்க சபையின் செயலாளருமான ரோஷன் கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சின் (பாடசாலை அலுவல்கள்) மேலதிக செயலாளர் டப்ளியூ. ஏ. நீலிகா பெரேரா உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.